"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Experience Proverbs – அனுபவ பழமொழிகள்

பழமொழிகள் பேச்சு வழக்கிலேயே வழங்கப்பட்டுவந்தன. பழமொழிகளுக்கு தனியாக இலக்கணம் எதுவும் கிடையாது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற வரையறையும் கிடையாது. ஆனாலும் கருத்தாழம் மிக்கவையாக இருந்தன. சொல்லவந்த கருத்தை “நச்”சென்று மனதில் பதியும் வண்ணம் சொல்லிச்சென்றன. எனவேதான் இதற்கு “எழுதா இலக்கியம்” என்றொரு பெயருமுண்டு.

வாழ்வில் நிகழ்ந்த தங்களுடைய அனுபவங்களையே நீதியுரைகளாக சொல்லிச்சென்ற பழமொழிகள் சிலவற்றை இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.

  • வயசு வைக்கோலா போகுதாம், இந்த லட்சணத்துல கிழவி கின்னரம் வாசிக்குதாம்.
  • தனக்கு கொஞ்சம் ஆயாசமா (களைப்பு) இருக்குன்னு சொல்லி பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டானாம்.
  • பஞ்சாங்கம் படித்தால் பல சாஸ்திரம், போனா போகட்டுமுன்னு கஞ்சி குடிச்சா கலசம் நிறைய மூத்திரம்.
  • கேணையன் கிழித்த துணி கோவணத்துக்குதான் ஆச்சு.
  • அடிக்காம அழுவுற பொம்பளையையும் இடிக்காம பெய்யுற மழையையும் நம்புறது வீண்.
  • கொடுவா புடி புடிச்சாதான் அருவா பிடி கிடைக்கும்.
  • குத்தாலத்துல குளிக்க போக கும்பகோணம் வந்ததுமே துணியை அவுத்தானாம்.
  • மொழி தப்பினால் வழி தப்பும்.
  • வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.
  • வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
  • பஞ்சும் நெருப்பும் ஒன்றாய் கிடக்குமோ? நெருப்பு பந்தலில் மெழுகு பொம்மைதான் ஆடுமோ?
  • பட்டும் பட்டாடையும் பெட்டியில் இருக்கு, ஆனா காலணா காசுதான் கந்தையில் இருக்கு.
  • பந்திக்கில்லையாம் வாழைக்காயி பந்தக்காலில் ஆடுதாம் வாழைகாய் தோரணம்.
  • பனை நிழலும் நிழலாமோ? பகைவர் உறவும் உறவாமோ?
  • அறப்படித்தவன் அங்காடி போனால் வாங்கவும் மாட்டான், விற்கவும் மாட்டான்.
  • பெற்றவள் வயிற்றை பார்ப்பாள், பெண்சாதி மடியை பார்ப்பாள்.
  • கவலைக்கு மருந்து அதனை காலடியின் கீழ் போடுவதுதான்.
  • கேட்காத கடனும் பாழ். பார்க்காத பயிரும் பாழ் 
  • பத்து பிள்ளை பெத்தவளுக்கு தலைச்சான் பிள்ளைக்காரி பக்குவம் சொன்னாளாம்.
  • கீரை கடைக்கும் எதிர்கடை வேண்டும்.
  • பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்று சிறுக்கிறதுமில்லை.
  • வைய வைய வைரக்கல்லாம், திட்ட திட்ட திண்டுக்கல்லாம்.
  • வெண்கல பூட்டை ஓடச்சி விளக்குமாத்த திருடிக்கிட்டு போனானாம்.
  • தானே குளிக்கும் குழந்தை வயிற்றை மட்டுமே தேய்க்குமாம்.
  • சருகை கண்டு தணலஞ்சுமா, எருவைக்கண்டுதான் பயிர் அஞ்சுமா.
  • ஆற்றாது அவரழுத கண்ணீர் நெஞ்சு நீத்தாருக்கு கூற்றாக மாறிவிடும்.
  • சாபங்கள் ஊர்வலத்தை போல எங்கே தொடங்கியதோ அங்கேயே முடிகின்றன.
  • பாடுபட்டவனுக்கு பத்துப்பல்லாம் இளிச்சவாயனுக்கு இருபது பல்லாம்.
  • “விதியே”ன்னு போன விதியை.. வீட்டுக்கு கூட்டிட்டுவந்து கறி விருந்து வச்சாளாம் சிங்கார சிறுக்கி.
  • அடுத்தவன் கைய தலைக்கு வச்சுக்கிட்டு எத்தனை நாளைக்குத்தான் தூங்குறது?
  • புத்திகெட்ட ராஜாவுக்கு மதிகெட்ட மந்திரி.
  • தட்டுல இருக்குது சட்டினி… அத பட்டுன்னு கொட்டுனா பட்டினி.
  • மலையத்தனை சாமிக்கு தினையத்தனை பூ.
  • மலையளவு சாமிக்கு கடுகளவாம் கற்பூரம்.
  • தட்டான் தாய் பொன்னிலும் மாப்பொன் களவெடுப்பான்.
  • வாழைப்பழம் தவிர வேறெதுவும் தின்னக்கிடைக்காதவன் அதன் தோலையும் சேர்த்தே தின்பான்.
  • தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
  • உழக்கில் கிழக்கென்ன.. மேற்கென்ன..?
  • ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோலுக்காவது ஆகுமே.
  • பாடப்பாட ராகம். மூட மூட ரோகம்.
  • அதையும்தான் சொல்வானேன் வாயும்தான் நோவானேன்.
  • தீயினால் சுட்ட புண் உள் ஆறும். ஆறாது நாவினால் சுட்ட வடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!