"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Funny Proverbs

ஒரு விஷயத்தை எளிதாக புரியவைப்பதற்கு நம் முன்னோர்கள் எதுகையுடன் கூடிய எளிய சொற்றொடர்களைப் பயன்படுத்தி வந்தனர். இவைகள் கேட்போர் மனதில் ஆழமான பதிதலையும், புரிதலையும் ஏற்படுத்தின. இவைகளே காலப்போக்கில் ”பழமொழிகள்” என அழைக்கப்பட்டு வந்தன.

இவைகள் பல தத்துவ மொழிகளாகவும், வேடிக்கை மொழிகளாகவும் இன்றும் நம்மிடையே உறவாடி வருகின்றன.

இலக்கியம் சார்ந்த விஷயங்களை விரிவாக அலசும் இப்பகுதியில் வேடிக்கையாகவும், அதேவேளையில் சிந்தனையை தூண்டும் விதத்திலும் அமைந்துள்ள சில வேடிக்கை பழமொழிகளை (Funny Proverbs) காண்போம் வாருங்கள்!.

  • எண்ணி செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
  • நல்ல பெண்டு வாய்க்குமாம் புண்ணியவானுக்கு, கூடவே பண்டமும் வாய்க்குமாம் பாக்கியவானுக்கு.
  • உண்டிக்கு ஒருகரண்டி நெய் இல்லையாம். ஆனால் ஹோமத்துக்கு ஒன்பது கரண்டி நெய்யாம்.
  • சீனி சர்க்கரை சித்தப்பா… ஏட்டில் எழுதி நக்கப்பா…
  • குடல் கூழுக்கு அழுதுச்சாம். கொண்டை பூவுக்கு அழுதுச்சாம்.
  • மலையளவு சாமிக்கு கடுகளவே கற்பூரம்.
  • கடன் வாங்கியும்  பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
  • தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? 
  • அவனே அவனே என்பதை விட சிவனே சிவனே என்பது மேல்.
  • கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கு ரெண்டு கொடுமை அவுத்து போட்டுக்கிட்டு ஆடிச்சாம்.
  • உண்டவன் பாய் தேடுவான். உண்ணாதவன் இலை தேடுவான்.
  • வித்தார கள்ளி விறகொடிக்கப் போனாளாம், அங்கு கத்தாழ முள்ளு கொத்தோடு குத்திச்சாம். 
  • எளியவன் பொண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
  • ஆசைக்கு அக்காவை கட்டினானாம், கொஞ்சுவதற்கு கொழுந்தியாளை கட்டினானாம்.
  • மகள் வாழ்கிற வாழ்க்கைக்கு மாசம் பத்து கட்டு விளக்குமாறு.
  • தலைப்பிள்ளை ஆண், தப்பினால் பெண்.
  • நீந்த தெரியாதவனை ஆறு கொண்டு போகும்.
  • எண்சாண் உடம்பு இருக்க கோவணத்தில் போய் விழுந்ததாம் இடி.(செத்தாண்டா சேகரு).
  • நித்திய கண்டம் பூரண ஆயுசு.
  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு . அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி.
  • கையை பிடித்து கள்ளை வார்த்து, பின் மயிரை பிடித்து பணத்தை வாங்குவது போல. 
  • ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்.
  • காட்டை வெட்டி சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்க பயமா?
  • கூறுகெட்ட மாடு ஏழு கட்டு புல் திங்குதாம்.
  • இந்த கூழுக்கா இருபத்தெட்டு நாமம்.
  • நமன் அறியா உயிரும் நாரை அறியா குளமும் உலகிலுண்டோ?
  • கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.
  • அங்காடிக்காரியை சங்கீதம் பாடச்சொன்னால் வெங்காயமே… கறிவேப்பிலையே… என்றுதான் பாடுவாள்.
  • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.
  • பரணியில் பிறந்தவன் தரணி ஆள்வான்.
  • சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடு செல்லும்.
  • இட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு.
  • இன்றைக்கு இலை அறுப்பவன் நாளைக்கு குலைஅறுப்பான்.
  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  • மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள். அப்புறம் துடைப்பக்கட்டை.
  • பல்லக்கு ஏற யோகம் உண்டு. ஆனால் அதில் துள்ளி ஏறத்தான் சீவன் இல்லை.
  • ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!