"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Funny Proverbs

ஒரு விஷயத்தை எளிதாக புரியவைப்பதற்கு நம் முன்னோர்கள் எதுகையுடன் கூடிய எளிய சொற்றொடர்களைப் பயன்படுத்தி வந்தனர். இவைகள் கேட்போர் மனதில் ஆழமான பதிதலையும், புரிதலையும் ஏற்படுத்தின. இவைகளே காலப்போக்கில் ”பழமொழிகள்” என அழைக்கப்பட்டு வந்தன.

இவைகள் பல தத்துவ மொழிகளாகவும், வேடிக்கை மொழிகளாகவும் இன்றும் நம்மிடையே உறவாடி வருகின்றன.

இலக்கியம் சார்ந்த விஷயங்களை விரிவாக அலசும் இப்பகுதியில் வேடிக்கையாகவும், அதேவேளையில் சிந்தனையை தூண்டும் விதத்திலும் அமைந்துள்ள சில வேடிக்கை  பழமொழிகளை (Funny Proverbs) காண்போம் வாருங்கள்!.

  • எண்ணி செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
  • நல்ல பெண்டு வாய்க்குமாம் புண்ணியவானுக்கு, கூடவே பண்டமும் வாய்க்குமாம் பாக்கியவானுக்கு.
  • உண்டிக்கு ஒருகரண்டி நெய் இல்லையாம். ஆனால் ஹோமத்துக்கு ஒன்பது கரண்டி நெய்யாம்.
  • சீனி சர்க்கரை சித்தப்பா… ஏட்டில் எழுதி நக்கப்பா…
  • குடல் கூழுக்கு அழுதுச்சாம். கொண்டை பூவுக்கு அழுதுச்சாம்.
  • மலையளவு சாமிக்கு கடுகளவே கற்பூரம்.
  • ஒட்டைக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்.
  • காட்டாற்றை கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, அதன் பின் நீயாரோ நான்யாரோ.
  • இடித்தவளும், புடைத்தவளும் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் அள்ளிக்கொண்டு போனாள்.
  • கடன் வாங்கியும்  பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
  • தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? 
  • மயிரை சுட்டால் கரியாகுமா ?
  • தொடையில் உள்ள புண் நடையில் காட்டும்.
  • மாடம் இடிந்தால் கூடம்.
  • உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
  • சீலை இல்லையென்று சித்தி வீட்டுக்கு போனாளாம் அவள் ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்.
  • பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம் வேட்டி.
  • புத்திகெட்ட ராசாவுக்கு மதிகெட்ட மந்திரிதான் வாய்க்கும்.
  • அரக்கப்பரக்க பாடுபட்டாலும் படுக்க பாய் இல்லையே ராசா.
  • அவனே அவனே என்பதை விட சிவனே சிவனே என்பது மேல்.
  • கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கு ரெண்டு கொடுமை அவுத்து போட்டுக்கிட்டு ஆடிச்சாம்.
  • உண்டவன் பாய் தேடுவான். உண்ணாதவன் இலை தேடுவான்.
  • வித்தார கள்ளி விறகொடிக்கப் போனாளாம், அங்கு கத்தாழ முள்ளு கொத்தோடு குத்திச்சாம். 
  • எளியவன் பொண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
  • ஆசைக்கு அக்காவை கட்டினானாம், கொஞ்சுவதற்கு கொழுந்தியாளை கட்டினானாம்.
  • மகள் வாழ்கிற வாழ்க்கைக்கு மாசம் பத்து கட்டு விளக்குமாறு.
  • தலைப்பிள்ளை ஆண், தப்பினால் பெண்.
  • நிறைகுடம் தழும்பாது குறைகுடம் கூத்தாடும்.
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • தேரோட போச்சு திருநாடு, தாயோட போச்சு பிறந்த வீடு.
  • கடலை தாண்ட ஆசையுண்டு, ஆனால் கால்வாயை தாண்ட கால் இல்லை.
  • நீந்த தெரியாதவனை ஆறு கொண்டு போகும்.
  • ஐங்காயம் கொண்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்சுரைக்காய்க்கு.  
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  • சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் வந்து விழுமா?
  • பிச்சை எடுத்தாராம் பெருமாளு அதை பிடுங்கி தின்னாராம் அனுமாரு.
  • தாலிக்கு நெருப்பு சாட்சி வேலிக்கு ஓணான் சாட்சி.
  • மரக்கட்டை சாமிக்கு சப்பாத்திக்கட்டைதான் காணிக்கை.
  • ரெண்டு பொண்டாட்டிக்காரனுக்கு கொண்டை இருந்தால் என்றுமே திண்டாட்டம்தான்.
  • ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?
  • எண்சாண் உடம்பு இருக்க கோவணத்தில் போய் விழுந்ததாம் இடி.(செத்தாண்டா சேகரு).
  • நித்திய கண்டம் பூரண ஆயுசு.
  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு . அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி.
  • கையை பிடித்து கள்ளை வார்த்து, பின் மயிரை பிடித்து பணத்தை வாங்குவது போல. 
  • ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்.
  • காட்டை வெட்டி சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்க பயமா?
  • கூறுகெட்ட மாடு ஏழு கட்டு புல் திங்குதாம்.
  • படப்போட திங்குற மாட்டுக்கு புடுங்கிபோட்டா காணுமா ?
  • கம்முன்னு கிடக்குமாம் நாய், அதை நோண்டி கெடுக்குமாம் பேய்.
  • சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.
  • இந்த கூழுக்கா இருபத்தெட்டு நாமம்.
  • பணக்காரன் பின்னும் பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?.
  • விடிய விடிய ராமாயணம் கேட்டானாம் .. விடிஞ்சப்புறம் கேட்டா சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம் .
  • கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்.
  • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்.
  • சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டான்.
  • ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு, அதிலும் கெட்டது குருக்களுக்கு.
  • கடையும்போது வராத வெண்ணை குடையும்போது வரப்போகுதா ?
  • ஆண்டிமகன் ஆண்டியானால் நேரமறிந்து சங்கு ஊதுவான்.
  • கப்பல்காரன் பொண்டாட்டி தொப்பைக்காரி, அந்த கப்பல் உடைந்து போனால் அவள் பிச்சைக்காரி.
  • நமன் அறியா உயிரும் நாரை அறியா குளமும் உலகிலுண்டோ?
  • கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.
  • அங்காடிக்காரியை சங்கீதம் பாடச்சொன்னால் வெங்காயமே… கறிவேப்பிலையே… என்றுதான் பாடுவாள்.
  • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.
  • பரணியில் பிறந்தவன் தரணி ஆள்வான்.
  • சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடு செல்லும்.
  • இட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு.
  • இன்றைக்கு இலை அறுப்பவன் நாளைக்கு குலைஅறுப்பான்.
  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  • மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள். அப்புறம் துடைப்பக்கட்டை.
  • பல்லக்கு ஏற யோகம் உண்டு. ஆனால் அதில் துள்ளி ஏறத்தான் சீவன் இல்லை.
  • ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.
  • விடிஞ்சா இருப்போமோ இல்லையோ என்று ஒவ்வொரு குடிமக்களின் மனசும் அடித்துக்கொண்டால் அதன் பெயரே “விடியல்” ஆட்சி.
  • பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி, மண் மேட்டிலே இருந்தா அக்கா! [அட… கொக்க மக்கா]
  • அக்கா ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான். [அப்படிப் போடு அருவாளை.. அடியே.. இங்க வாடி என் சக்களத்தி மவளே…]
  • சம்பளம் இல்லா சேவகனும், கோபப்படாத எஜமானும் உருப்பட்ட மாதிரிதான்.
  • வேண்டாவெறுப்பா பிள்ளையை பெத்து, அதுக்கு “காண்டாமிருகம்”னு பெயரும் வச்சானாம்.
  • குலத்தை கெடுக்கவந்த கோடாரி கம்பே.
  • அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • அம்மணமானவர்கள் வாழும் ஊரில் கோவணம் கட்டியவன் கோமாளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!