International Golden Mottos

வாழ்வின் ஏற்ற இறக்கங்களால் சலனப்பட்டு சருகாய் நிற்கும் மனதை இரண்டே வாக்கியங்களில் மகிழம்பூவாய் மலரச் செய்பவைதான் பொன்மொழிகள் என்னும் நன்மொழிகள்.

இந்த பொன்மொழிகள் இந்திய தேசத்தில் மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து தேசங்களிலுமே காணக்கிடைக்கின்றன.

அவ்வாறு பல தேசங்களிலும் இறைந்து கிடக்கும் நன்முத்துக்களை திறன்பட சேகரித்து இதோ இந்த பதிவின்மூலம் முத்துமாலையாக்கி உங்கள் சிந்தனைக்குள் சிறைவைக்கின்றோம்.

இதில் சிறப்பு என்னவென்றால் நம்முடைய தேடலில்… அந்தக் கழுகுப் பார்வையில்… இதோ “கைலாசா” தேசமும்கூட தப்பவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கு கூறப்பட்டுள்ள பொன்மொழிகள் அனைத்தும் வாழ்க்கைக்கு பயனுடையவை. எனவே படித்து பயனடைக…

  • செல்வத்தை விட செல்வாக்கே சிறந்தது.
  • பண்பை பகட்டு அழித்துவிடும்.
  • சொல்லாமல் போகிறவன் அழைக்காமல் திரும்பி வருவான்.
  • சிரித்ததால் இழந்த ஒன்றை, அழுவதால் திரும்பப்பெற முடியாது.
  • நண்பர்களே இல்லாதவன் தனக்குத்தானே விரோதி ஆகிறான்.
  • யாரை தோற்கடிக்க முடியவில்லையோ அவனை நண்பனாக்கிக் கொள்.
  • உன் நண்பனுடன் நீ வாக்குவாதம் புரியும்போதுதான் உன்னைப்பற்றியான அவனுடைய புரிதல் உனக்கே தெரிய வரும்.
  • வெட்கத்தை விட்டவன் வயிறு எப்போதும் நிரம்பியிருக்கும்.
  • முதலில் தகுதியை வளர்த்துக்கொள். பிறகு அத்தனைக்கும் ஆசைப்படு.
  • அத்தனைக்கும் ஆசைப்படுபவன் வாழ்வு அந்தரத்தில் ஊசலாடும்.
  • எல்லோரிடமும் இருக்கும் ஒன்று உன்னிடமும் இருக்குமானால் அது திறமையாக பார்க்கப்பட மாட்டாது மாறாக அது எல்லோராலும் உதாசீனப்படுத்தப்படும்.
  • அறிவுரை கூறுபவன் எவனும் அள்ளி கொடுக்கப்போவதில்லை.. அதற்கு தெளிவுரை கூறுபவனும் கிள்ளி கொடுக்கப்போவதில்லை.
  • பணக்காரனுடைய நட்பு உன்னை பிச்சைக்காரனாகவே வைத்திருக்கும்.
  • ஒரு நண்பனை இழக்க விரும்பினால் அவனுக்கு கடன் கொடு.
  • நீ அச்சத்துடன் எதிர்பார்க்கும் நாள் சீக்கிரமே வந்துவிடும். ஆனால் ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள் மெதுவாகத்தான் வந்து சேரும்.
  • எச்சரிக்கைக்கு செவிசாய்க்கிறவன் பாதி காப்பாற்றப்பட்டவனாகிறான்.
  • அண்டை வீட்டுக்காரனின் தாடி பற்றி எரிவதை அணைக்க செல்லும்முன் முதலில் உன் தாடியை ஈரமாக்கி கொள்.
  • செருப்பு தைக்கும் தொழிலாளி உன் கால்களை மட்டுமே பார்ப்பான்… உன் நடத்தையை அல்ல.
  • ஒரு நல்ல சமையல்காரனுக்கு அவனுடைய நாக்கே நல்ல எஜமானன்.
  • நேர்மை பாராட்டினை பெற்றுத்தரும். ஆனால் வயிற்றை பட்டினி போடும்.
  • நெருங்கிய சொந்தக்காரனின் வெறுப்பு நெருப்பைவிட ஆபத்தானது. எனவே பற்றியெரியும் முன் அணைத்துக்கொள்.
  • ஒரு தகப்பன் தன் ஐந்து குழந்தைகளுக்கும் சோறு போட்டு வளர்த்துவிடுவான். ஆனால் அந்த ஐந்து குழந்தைகளால் தன்னுடைய ஒரு தகப்பனுக்கு சோறு கொடுத்து பராமரிக்க முடிவதில்லை. இதுவே நிதர்சனம்.
  • கண்கள் பார்ப்பதற்கு, காதுகள் கேட்பதற்கு, ஆனால் வாய் பேசுவதற்கு அல்ல மாறாக பொத்திக்கொண்டு இருப்பதற்கே என்பதனை புத்திசாலிகளுக்கு சொல்லவேண்டியதில்லை.
  • மௌனமாக இருக்கும் முட்டாள் அறிவாளிபோல தோன்றுவான். எனவே பிறருக்கு நீ அறிவாளிபோல தெரிய வேண்டுமெனில் மௌனமாக இருந்து பழகு.
  • கால் இழந்தவனை விட வாக்கு இழந்தவனே அடிக்கடி இடறி விழுவான்.
  • வாய் நிறைய நீர் வைத்திருந்தவன் தன்னால் நெருப்பை ஊதி அணைக்க முடியவில்லையே என வருத்தப்பட்டானாம்.
  • ஏழைக்கு வாக்குறுதி கொடுக்காதே, பணக்காரனுக்கு கடன் படாதே… இரண்டுமே உன்னை நச்சரித்துக்கொண்டே இருக்கும்.
  • ஒன்றுமே தெரியாதவனுக்கு ஒரு சந்தேகமும் வருவதில்லை.
  • வாதாடுவதில் பயனில்லை என்றால் வசைபாட தொடங்கிவிடு.
  • அழுதுகொண்டே பிறந்த நீ புலம்பிக்கொண்டே வாழவும் பழகிக்கொள்.
  • சிக்கலில் சிக்க வேண்டுமா? இப்படியே எப்போதும் சிரித்துக்கொண்டே இரு.
  • நல்ல கண்ணையும் நொள்ளக்கண்ணாக மாற்றும் திறன் காதலுக்கு மட்டுமே உண்டு.
  • எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாமே என நீ தள்ளிப்போடும் ஒவ்வொரு காரியமும் உன்னால் எப்போதுமே செய்யப்படுவதில்லை. 
  • பணத்தின் அருமை தெரியவேண்டுமா? ஒருதடவையாவது பக்கத்து வீட்டுக்காரனிடம் கடன் வாங்கு.
  • எந்த வீட்டில் சேவலைவிட கோழி உரக்கக் கத்துகிறதோ அங்கு கூமுட்டைகளுக்கு பஞ்சமில்லை.
  • பெரிய கற்பாறைகளை சுலபமாக தாண்டுபவன்தான் சிறிய கூளாங்கல்லில் தடுக்கி விழுகிறான்.
  • பாடத்தெரியாதவனின் வாய்தான் எப்போதும் எதையாவது பாடிக்கொண்டே இருக்கும்.
  • அவசரம் காரியங்களை தாமதப்படுத்தும்.
  • வெட்கப்படுகின்ற பிச்சைக்காரனின் தட்டு வெறுந்தட்டாகவே இருக்கும்.
  • கட்டுப்பாடு இல்லாதவனின் வாழ்க்கை கௌரவமில்லாத சாவில் போய்தான் முடியும்.
  • எல்லோரும் தங்களை புத்திசாலி என எண்ணுவதினாலேயே உலகில் முட்டாள்கள் பெருகிவிட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!